இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21 -ம் தேதி, காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக இன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் பணியின்போது இறந்த காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தார்.
இதேபோல, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் , தமிழகக் காவல் துறை உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகள், மற்றும் காவல் ஆளிநர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இறந்த காவல் ஆளிநர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. இதேபோல, நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.