தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு இருந்த கொடி கம்பத்தை அகற்றப்பட்டதற்குத தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்று இரவு முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு இருந்த கொடி கம்பத்தை அகற்ற காவல் துறையினர் காட்டிய மும்முரம் வியப்பளிக்கிறது. இரவோடு இரவாக இதை தட்டி கேட்ட பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சட்ட ஒழுங்கு சீர்கேடு, செயின் பறிப்பு, திருட்டு, போக்குவரத்து விதி மீறல்கள் என சென்னை மாநகரமே திக்கு முக்காடி கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கொடி கம்பத்தை அகற்ற நூற்றுக்கணக்கான போலீசாரை ஏவி பாஜக தொண்டர்களை தாக்கி, காயப்படுத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இரவோடு இரவாக இந்த நடவடிக்கை என்பது பாஜகவின் வளர்ச்சியை கண்டு தி மு க அஞ்சுகிறது என்பதையும், அண்ணாமலை அவர்களின் ஆளுமையை, அவரின் துணிவான அரசியலை கண்டு தி மு க கலங்கி போயுள்ளதையுமே உணர்த்துகிறது.
ஃபாஸிஸ தி மு க அரசுக்கு கடும் கண்டனங்கள். உடனடியாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.