மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ககன்யான் என்ற திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தரையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவிதாழ் வட்டப்பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்த முடிவு செய்துள்ள போதிலும் அதற்கு முன்பு 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான 13 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில், காலை 8 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கு விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 8,45 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3 வது முறையாகவும் கவுண்டவுன் நிறுத்தப்ட்டது.
பின்னர் சோதனை ஓட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் , என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம் என்று கூறினார்.
இதுபோன்று 3 முறை விண்கலம் ஏவும் பணி தள்ளி போன நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 20 நிமிடங்களில் மாதிரி விண்கலம் அனுப்பும் சோதனை நிறைவு பெறும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விண்வெளி வீரர்கள் அமர கூடிய கலன் பகுதி ராக்கெட்டில் இருந்து பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.