ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் ககன்யான் சோதனை வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்திற்கான பணியாளர்கள் தப்பிக்கும் முறையை சோதனை வாகனம் மூலம் காண்பிப்பதே இந்த பணியின் நோக்கம் என்று தெரிவித்தார். “குழு எஸ்கேப் சிஸ்டம் குழுவினர் மாட்யூலை வாகனத்திலிருந்து எடுத்துச் சென்றதாகவும், கடலில் டச்-டவுன் உட்பட அடுத்தடுத்த செயல்பாடுகள் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இவை அனைத்திற்கும் தரவுகள் எங்களிடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சோம்நாத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திட்ட இயக்குநர் எஸ்.சிவக்குமார், “இது முன் எப்போதும் இல்லாத முயற்சி. இந்த மூன்று சோதனைகள் பூங்கொத்து போன்றது. இந்த மூன்று அமைப்புகளின் சிறப்பியல்புகளை இந்த பரிசோதனையின் மூலம் சோதிக்க விரும்பியதை தற்போது பார்த்தோம், முதல் முயற்சியில் நாங்கள் மிகச்சரியாக நிரூபித்துள்ளோம். அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டன என அவர் தெரிவித்தார்.
கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக நாங்கள் தவம் இருந்தோம், தற்போத முதல் முயற்சியிலேயே அதைச் செய்ய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என சிவக்குமார் கூறினார்.