டெல்லியில் இந்திய இராணுவ பாரம்பரிய விழாவை தொடங்கி வைத்த மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது ஆயுதப் படைகளின் பங்கைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் இந்திய இராணுவ பாரம்பரிய விழாவை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த விழா உரையாடல்கள், கலை, நடனம், நாடகம், கதை சொல்லல் மற்றும் கண்காட்சிகள் மூலம் பல நூற்றாண்டுகளாக பரிணமித்த இந்தியாவின் வளமான இராணுவக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில், புகழ்பெற்ற அறிஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதங்கள் மூலம் வெவ்வேறு புரிதல்களையும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கும். மேலும், இந்த நிகழ்வின்போது, நாட்டின் பண்டைய உத்தியிலான புத்திசாலித்தனத்தை சமகால இராணுவக் களத்துடன் ஆராய்ந்து ஒருங்கிணைப்பதன் மூலம் உள்நாட்டு உரையாடலை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் மற்றும் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பான ‘புராஜெக்ட் உத்பவ்’ திட்டத்தையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைவர், முதல் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ, கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “இந்த விழாவை முதன்முறையாக ஏற்பாடு செய்ய முயற்சித்த யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷனை (யு.எஸ்.ஐ.) நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த இந்திய இராணுவ பாரம்பரிய விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு, கடந்த சில தசாப்தங்களில் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் ஈடு இணையற்ற துணிச்சல் மற்றும் விலைமதிப்பற்ற பங்கை (இந்தியாவின் இராணுவ வரலாறு) பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உருவாகும். நமது ஆயுதப் படைகளின் பங்கைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உத்வேகம் பெறுவார்கள் ” என்றார்.
இந்த விழாவானது, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நீண்ட மற்றும் மகிமை வாய்ந்த இராணுவ வரலாறு மற்றும் கலாச்சாரம் இருந்தபோதிலும், அதன் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. 21-ம் நூற்றாண்டில் ஆயுதப்படைகளை அபிவிருத்தி செய்வதற்கான இலக்குகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், அதன் தாக்கத்தின் மூலம் இராணுவ வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் பொது ஈடுபாட்டின் களத்தில் ஒரு அளவுகோலை உருவாக்க முயல்கிறது என்றால் மிகையாகாது.