தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, பொது அமைதியைக் கடைப்பிடிக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக, திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் பண்டிகை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. அப்போது, ரசிகர்கள் காட்சி திரையிடப்படுகிறது.
இதில், ரசிகர்களுக்கு டிக்கட் பன்மடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ரசிகர்கள் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடையும் வகையில் செயல்படுகின்றனர். இதனால், பொது மக்களுக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படுகின்றன. எனவே, ரசிகர்கள் காட்சிகளை முறைப்படுத்த புதிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கங்கா புர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, பொது அமைதியைக் காக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.