சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நக்சலைட்டுகள் அதிகம் இருக்கும் மாநிலமாக சத்தீஸ்கர் விளங்குகிறது. இதன் காரணமாகவே, வெறும் 90 தொகுதிகளை மட்டுமே கொண்ட அம்மாநிலத்தில் 2 கட்டமாகத் தேர்தலை நடத்தவிருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதேசமயம், மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் குழு பிரிவு மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், மாவட்ட ரிசர்வ் காவலர் குழுவினர் இன்று காலை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கோயாலிபேடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் காலை 8 மணியளவில் மாவட்ட ரிசர்வ் காவலர் குழுவினர் மீது திடீரென நக்சல்கள் தாக்குதல் நடத்தனர்.
இதையடுத்து, காவலர் குழுவினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில்தான் 2 நக்சலைட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்தது. பின்னர், சம்பவ இடத்தில் இருந்து 2 நக்சல்கள், அவர்களது துப்பாக்கி, 2 போர் ரைபிள் மற்றும் ஆயுதங்கள், வெடிமருந்துகளை காவலர் குழுவினர் கைப்பற்றினர்.
எனினும், கொல்லப்பட்ட நக்சலைட்களைப் பற்றிய அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ள முதல்கட்டத் தேர்தலில், கான்கேர் மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.