ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த 2-வது பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட இம்மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி, நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
மேலும், இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. அதேபோல, வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மாநிலத்தில் போட்டியிடும் 41 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்டோபர் 1-ம் தேதி பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, மற்ற இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை இறுதி செய்வதற்காக, டெல்லியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் மத்திய தேர்தல் குழு கூடி விவாதித்தது.
இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைவர்கள் பி.எல்.சந்தோஷ், வசுந்தரா ராஜே, பிரகலாத் ஜோஷி, கஜேந்திர சிங் ஷெகாவத், கைலாஷ் சவுத்ரி, சதீஷ் பூனியா, சி.பி.ஜோஷி, அருண் சிங், குல்தீப் பிஷ்னோய் ராஜேந்திர ரத்தோர், இணை தேர்தல் பொறுப்பாளர் நிதின் படேல், இணை பொறுப்பாளர் விஜய ரஹத்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து 84 பேர் கொண்ட 2-வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பட்டியலில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஜலர்படான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும், ராஜேந்திர ரத்தோட் தாராநகரிலும், ஜோதி மிர்தா நாகூரிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 75 பேர் கொண்ட பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.