அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலை தேஜ் மற்றும் ஹாமன் புயல்கள் மிரட்டி வருகின்றன. இதனால், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும், புதிதாக யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 19-ம் தேதி காலை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அன்றையதினம் நள்ளிரவே தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது. பின்னர், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. இந்தப் புயலுக்கு ‘தேஜ்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘தேஜ்’ புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபிக்கடலில் ஏமன் நாட்டின் சகோத்ரா நகருக்கு 330 கி.மீ. கிழக்கு மற்றும் தென்கிழக்கேயும், ஓமன் நாட்டின் சலாலா நகருக்கு 690 கி.மீ. தெற்கு மற்றும் தென்கிழக்கேயும் மற்றும் ஏமன் நாட்டின் அல் கைடா நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இந்த தேஜ் புயல் இன்று மதியம் மேலும் வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல, வங்கக்கடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு மேற்கே மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது அந்தமான் போர்ட் பிளேயருக்கு வடக்கு மற்றும் வடமேற்கில் சுமார் 110 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் சாகர் தீவிற்கு தெற்கு மற்றும் தென்கிழக்கே 1,460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இந்த புயலுக்கு ஹாமன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த ஹாமன் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால், மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இது நாளை காலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு இருக்கிறது.
பின்னர், இப்புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வரும் 25-ம் தேதி அதிகாலையில் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே வங்கதேச கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதோடு, காற்றும் பலமாக வீசி வருதிறது. எனவே, ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறும், புதிதாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதனிடையே, புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில், எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை எண்ணூர் உட்பட கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மேலும், மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உயிரிழப்பைத் தடுப்பதற்கும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிழக்கு பிராந்திய கடலோரக் காவல் படை, தமிழகம், ஆந்திரா மாநிலங்களின் கடல்பகுதியில் ரோந்து சென்று வருகிறார்கள். மேலும், ஹெலிகாப்டர்களுடன் கூடிய கடலோர காவல் படை கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரபிக்கடல், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல்களைத் தொடர்ந்து இன்று முதல் 23-ம் தேதி வரை தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், 26-ம் தேதி வரை மத்திய மேற்கு பகுதிக்கும், 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வடக்கு பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.