தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில், குப்புசாமி மகன் லட்சுமணனுக்குச் சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று உள்ளது.
இந்த குடோனில் அதிகாலை 5 மணிக்கு திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அதற்குள் விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பட்டாசு குடோன் தரைமட்டமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் சமீப காலமாகப் பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்துள்ளது என்பதும், இந்த குடோனில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் பெண்ணாகரம் நீதிமன்றத்தில் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டுப் பாதுகாத்து இருந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.
அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்குச் சற்று ஒதுக்குப் புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், கிருஷ்ணகிரியில், பட்டாசு குடோன் வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தர். பலர் படுகாயமடைந்தனர். அதேபோல, கடந்த சில மாதங்களில் மட்டும் அரியலூர், விருதுநகர், சிவகாசி மற்றும் சேலம் என பல்வேறு பகுதிகளில் பட்டாசு குடோன் வெடிவிபத்து தொடர் கதையாக உள்ளது.
எனவே, இனி வரும் காலத்திலாவது, பட்டாசு குடோன் வெடி விபத்துகளில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.