நவராத்திரி விழாவின் நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவிலில் துர்கா தேவியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நவராத்திரி விழா, பெண் தெய்வமான துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வைத்து, 9 நாட்கள் நடைபெறும் விழாவாகும். நிறைவு நாளான 9-ம் நாள், மாகா நவமி என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நவராத்திரி விழாவின் மிகவும் புனிதமான நாட்களில் ‘மகா நவமி’யும் ஒன்று. இது துர்கா தேவி ‘மகிஷாசுரன்’ என்ற அரக்கனை வென்றதைக் குறிக்கிறது. இது ‘மா’ துர்க்கையின் வடிவங்களில் ஒன்றான ‘சித்திதாத்ரி’ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, இவ்விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், துர்கா தேவியின் வடிவங்களில் ஒன்றான வைஷ்ணவ தேவிக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் கோவில் அமைந்திருக்கிறது. இது இந்து யாத்ரீகர்களுக்கான மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆகவே, இக்கோவிலில் நவராத்திரி விழா களைகட்டும். குறிப்பாக, விழாவின் நிறைவுநாளான மகா நவமியன்று இக்கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அந்த வகையில், 9-வது நாளான இன்று வைஷ்ணவ தேவியை தரிசிக்க காலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து தேவியை தரிசித்தனர். முன்னதாக, ‘மகா அஷ்டமி’ விழாவான நேற்று, ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கோவிலில் தரிசனம் செய்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து, ஆலய வாரியத்தின் இணையதளத்தில் ‘நேரடி தரிசன வசதி’ மற்றும் இருமொழி சார்ட்போர்டை பக்தர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும், மாதா வைஷ்ணவ தேவி புனித யாத்திரை பற்றி, ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ‘தி பக்தி ஆஃப் ஷக்தி’ என்கிற யாத்திரை வழிகாட்டி புத்தகத்தையும் வெளியிட்டார்.
இதேபோல, நவராத்திரி விழாவின் நிறைவு நாளான ‘மகா நவமி’யை முன்னிட்டு, அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும், தலைநகர் டெல்லியிலுள்ள ஜாண்டேவாலன் கோவில், சத்தர்பூர் கோவில் ஆகிய கோவில்களில் நடந்த காலை ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தேவியை தரிசனம் செய்தனர்.
இது தவிர, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மும்பா தேவி கோவிலிலும் அதிகாலை ‘ஆரத்தி’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தேவியை தரிசித்தனர்.