வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. இது, ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப்பில் இருந்து தெற்கில் சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
நாளை அதாவது 24-ம் தேதி சற்று வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் கேட்பாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையைக்கடக்க வாய்ப்பு உள்ளது. இது புயலாக உருவாக்கும் பட்சத்தில் ஹாமூன் என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த பெயரை ஈரான் நாடு பரிந்துரை செய்துள்ளது.
வங்கக்கடலில் பயங்கர காற்று வீசுவதால், சென்னை, தூத்துக்குடி, பாம்பன், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.