கர்நாடகா மாநிலத்தில், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 2022 -ம் ஆண்டு, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி வழங்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது.
இது தொடர்பான வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது. அப்போது, பள்ளிகளில் மத அடையாளங்களை அணிந்து வரத்தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் அனைவரும் ஒரே மாதிரியாகக் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்களின் தனிப்பட்ட உடைகளை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். குறிப்பாக, மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத விரும்பினாலும், அதற்கு அரசு அனுமதி வழங்கும் என்றார்.
அமைச்சர் சுதாகர் அறிவிப்பு, கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இருப்பதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகக் காங்கிரஸ் அரசும், அமைச்சர் சுதாகரும் செயல்படுவதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றத்திலும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.