சென்னை மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும் , யார் வெற்றி பெறுவார் ?
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று நடைபெற்று வருகிறது. இதில் 22 வது லீக் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 லீக் போட்டிகளிலும் தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இன்றையப் போட்டியில் களமிறங்குகிறது.
ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.
மேலும் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கேப்டன் பாபர் அசாமின் பார்ம் அணிக்கு தலைவலியாக மாறியுள்ளது. ரிஸ்வான் மட்டுமே தொடர்ந்து நிலையான ஆட்டத்த வெளிப்படுத்தி வருகிறார்.
உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பினும், நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு அது சாதகமாக அமையவில்லை என்பதே உண்மை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் எக்ஸ்ட்ராக்களாக ரன்களை வாரி வழங்கினர். அதோடு, வழக்கம்போல் பில்டிங்கிலும் சொதப்பி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சை முதன்மையான ஆயுதமாக கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. சுழலுக்கு சாதகமான சென்னையில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அது நிகழ வாய்ப்புள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அத்தனை முறையும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சிதம்பரம் மைதானம் நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரம் ஸ்பின்னர்களும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம். டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே விரும்புவார்கள்.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் பாகிஸ்தான் 73% வெற்றி பெரும் என்றும் ஆப்கானிஸ்தான் 27% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.