அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசிக்கும் இந்திய அமெரிக்கர் ஜாஸ்மர் சிங், இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் இந்திய அமெரிக்கரான ஜாஸ்மர் சிங். இவர் இந்தியாவுக்கு வருவதற்காக ஆயத்தமாகி வந்தார். எனவே, தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் டிரைவர் இறங்கி வந்து, ஜாஸ்மர் சிங்கை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இதில், ஜாஸ்மரின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜாஸ்மர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த வாகனத்தின் டிரைவரை கைது செய்தனர்.
ஆனால், இது ஒரு இனவெறித் தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், சாதாரண கொலை வழக்காக மட்டுமே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நிச்சயமாக இனவெறித் தாக்குதல்தான் என்று ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறியிருக்கிறார்.
காரணம், அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில், இதே நியூயார்க் நகரில் தலையில் டர்பன் அணிந்தபடி பேருந்தில் பயணித்த 19 வயது சிறுவனை, 26 வயது அமெரிக்க இளைஞர் கிறிஸ்டோபர் பிலிப்பைக்ஸ், டர்பனை அகற்றச் சொல்லி தாக்கினார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நியூயார்க்கில் கொல்லப்பட்ட ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறுகையில், “சீக்கிய சமூகத்தினரே எச்சரிக்கையாக இருங்கள். உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னைப் போல யாரும் தங்களது தந்தையையோ, சகோதரர் அல்லது மகனையோ இழந்து விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.
அதேசமயம், ஜாஸ்மர் சிங் தாக்குதல் குறித்து நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறுகையில், “ஜஸ்மர் சிங் தனது நகரத்தை நேசித்தார். அவரது துயர மரணத்துக்கு நியூயார்க் மக்கள் அனைவரின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அப்பாவி உயிரைப் பறித்த வெறுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்” என்று கூறியிருக்கிறார்.