காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாத முகாம்களை நோக்கி இஸ்ரேல் நாட்டின் பீரங்கி எய்த குண்டு, தவறுதலாக எகிப்து நாட்டின் எல்லையைத் தாக்கி இருக்கிறது. இதற்கு, இஸ்ரேல் இராணுவம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது கடுமையான எதிர்தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேரும், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4,500 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் சபதம் செய்திருக்கிறது. எனவே, 17-வது நாளாக இன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில்தான், காஸா நகரை நோக்கி வீடப்பட்ட இஸ்ரேல் நாட்டின் பீரங்கி குண்டுகள் தவறுதலாக எகிப்து நாட்டைத் தாக்கி இருக்கிறது.
அதாவது, இஸ்ரேல் – எகிப்து எல்லைப் பகுதியான கேரேம் ஷலோம் பகுதியில்தான் ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆகவே, காஸா நகருக்கு பதிலாக எகிப்து பக்கம் வீசிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடக்கிறது.
எனவே, இந்தச் சண்டையில் சூயஸ் கால்வாய் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆகவேதான், பீரங்கி குண்டு எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், இது திட்டமிட்ட தாக்குதல் இல்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சில மணி நேரங்களுக்கு முன்பு இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக கேரேம் ஷலோம் எல்லையை ஒட்டிய எகிப்து இராணுவ எல்லைப் பகுதியை நோக்கி தாக்கி இருக்கிறது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.