தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கத் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான கோப்புகளைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காகத் தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அனுப்பியது.
இந்த நிலையில், சைலேந்திர பாபு நியமனம் தொடர்பாக, அவரது அனுபவம், திறமை குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
தற்போது,டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை கொண்டு வரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சைலேந்திர பாபுவுக்கு 62 வயது நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளது என்பதாலும், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு அவரை தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.