திமுக மற்றும் திமுக அரசின் அராஜகம் குறித்து விசாரணை நடத்த பாஜக மேலிடக் குழு வரும் 27 -ம் தேதி சென்னை வருகை தர உள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அனைவர் இல்லங்களிலும் செல்வமும் ஆரோக்கியமும் பெருகவும், குழந்தைகள் நல்ல கல்வி வளத்தினைப் பெறவும், தொழில் முனைவோர்கள் நல்ல லாபம் ஈட்டவும் அன்னை சரஸ்வதி தேவி ஆசீர்வதிக்கட்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக மற்றும் திமுக அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
மேலும், திமுக மற்றும் திமுக அரசின் அராஜகம் குறித்து பாஜக தலைமை நியமித்த குழு வரும் 27 -ம் தேதி சென்னை வருகை தர உள்ளதாகவும், அக்குழு கள ஆய்வு நடத்தி திமுகவின் உண்மை முகத்தைத் தலைமைக்குத் தக்க ஆதாரங்களுடன் அறிக்கை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.