விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட்-ன் (NCEL) லோகோ மற்றும் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்றால், பண்ணைகள் மற்றும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும், விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உலகச் சந்தைக்கு இடையேயான தொடர்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த வகையில், தேசிய ஏற்றுமதி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட், விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச விலையில் பொருட்களை வாங்கும். ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த லாபத்தில், 50 சதவீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். இது குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) விட லாபம் அதிகமாக இருக்கும்.
கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பான என்.சி.இ.எல்., விவசாயிகளுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள இதுவரை 7,000 கோடி ரூபாய் ஆர்டர்களைப் பெற்றிருக்கிறது” என்றார்.