உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038-ஆம் ஆண்டு சதய விழா இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன.
மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை, அவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இராஜராஜ சோழனின், 1038-வது சதய விழா இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது.
சதய விழாவை முன்னிட்டு, பெரிய கோவில் விமானம், மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், இராஜராஜன் நுழைவு வாயில், கோவில் உள் பிரகாரம், வெளிபிரகாரம், கோவில் மதில்சுவர் என அனைத்து இடங்களிலும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், தஞ்சாவூரின் முக்கிய இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், திருமுறை அரங்கம், மேடை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை, சிறப்பு பரதநாட்டியம், குரல் இசை, கவியரங்கம், சிவதாண்டவம், இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது.
மேலும் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், பெருந்தீப வழிபாடு, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, மாமன்னன் இராஜராஜன் விருது வழங்குதல், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.