அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், ஓசூர் இராமநாயக்கன் ஏரிக்கரையில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஓசூர் இராமநாயக்கன் ஏரிக்கரையில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி பூஜை நடந்தது. முன்னதாக, கங்கை அம்மன் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து, சிறப்புப் பூஜை நடந்தது. தொடர்ந்து, சங்க நாதம் ஒலித்து, ருத்ர முரசு முழங்கி, நீர்நிலையைக் கங்கை அன்னையாக பாவித்து, சிறப்பு வழிபாடு நடந்தது.
வட இந்தியாவிலுள்ள கங்கை நதிக்கரையில் நடக்கும் பிரமாண்ட கங்கா ஆரத்தி போலவே, இராமநாயக்கன் ஏரிக்கரையிலும் பிரமாண்ட தீப ஜோதியுடன், மங்கள ஆரத்திகாண்பிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தீபமேற்றி, தண்ணீரில் விட்டு வணங்கினர்.
இதுகுறித்து பாரதிய சன்னியாசிகள் சங்கம் கூறியதாவது, நம் அடிப்படை ஆதாரமான நீர்நிலைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன், நதிகளைப் பாதுகாத்து மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்ந்து, மழை பொழிந்து, விவசாயம் செழித்து, நாடு வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக, தெரிவித்தனர்.