இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக காஷா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை 17வது நாளாக நீடித்து வரும் நிலையில், குறைந்தது 5,087 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 15,270 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள எக்ஸ பதிவில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்பு தொடர்பான கவலைகள் தொடர்பாக விவாதித்ததாகவும், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான முறையில் பிரச்னைகளை தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்பாக ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.