பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். விடுமுறை இன்று முடிவடையும் நிலையில், ஊர் திரும்புவதற்காக ஏராளமானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதிக கட்டணம் வசூலித்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்தது. அதிக கட்டணம் வசூலித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 120 பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க செயலாளர் மாறன் தெரிவித்திருந்தார்.
தங்கள் கூட்டமைப்பின் கீழ் 1,700க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளதாகவும், மற்ற தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்துக்கும் தங்கள் சங்கத்திற்கும் தொடர்பில்லை என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் வேலை நிறுத்தம் அறிவித்த தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை இணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்தம் அறிவித்ததால் வெளியூர் சென்றிருந்த பயணிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர். சுமார் 10 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்துள்ள நிலையில், திடீரென ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவிப்பை ஏற்றுக்கொள்ள இயலாது என பயணிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயணிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதும், இந்த விவகாரத்தை திமுக அரசு கையாண்ட விதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.