சென்னையை அடுத்த வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மீது, மின்சார இரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களுடைய குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கும் பயணம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சுரேஷ், ரவி, மஞ்சுநாத் ஆகியோர் ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு தங்களுடைய பெற்றோருடன் வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மதியம் ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தின், அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களும், திடீரென இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.
அப்பொழுது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார இரயில் வந்து கொண்டிருந்தது. இதனைக் கவனிக்காமல் சிறுவர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். மேலும் இரயில் ஓட்டுநர் ஆரன் அடித்து எச்சரித்துள்ளார்.
அப்பொழுது இரயில் மோதியதில் மூன்று சிறுவர்களும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். அதில் இரண்டு சிறுவர்களுக்கு காது கேட்காது என்பதும், ஒரு சிறுவனுக்கு வாய் பேச முடியாது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரயில் மோதி மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.