இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 நிலைகள் அழிக்கப்பட்டதாகவும், முக்கியத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை வீசியதால் இஸ்ரேல் திணறிப்போனது. எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், 18-வது நாளாக எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஹமாஸ் தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய அசுரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 4,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400-க்கும் மேற்பட்ட நிலைகளை தாக்கி அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஹமாஸின் தீவிரவாத நிலைகளை அழிப்பதற்காக பரந்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபட்டோம். அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 நிலைகள் அழிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, மற்றொரு பதிவில், ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசுகின்றனர். கடல் வழியாக ஊடுருவி மசூதிகளில் ஆயுதங்களை பதுக்கி வைக்கிறார்கள். காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் யாஹ்யா சின்வார், முகமது டெய்ஃப், சலே அல்-அரூரி, இஸ்மாயில் ஹனியே ஆகியோரால் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய படுகொலையை நாங்கள் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறுகையில், “இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்று விரும்புகிறது. எனவேதான், கடும் தாக்குதல் நடத்தி ஹமாஸ் முக்கியத் தலைவர்கள் மற்றும் தளபதிகளை அழித்து வருகிறோம். மேலும், அவர்களின் உட்கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதோடு, தெற்கில் தரைப்படை நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தயாராக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் விமானப்படை ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கியதாகக் கூறியிருக்கிறது. இதில், ஒரு இராணுவ வளாகமும், கண்காணிப்பு நிலையமும் தாக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், “ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் உள்கட்டமைப்புகள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு இராணுவ வளாகம் மற்றும் கண்காணிப்பு நிலையம் ஆகியவை அழிக்கப்பட்டன. அதேபோல, இன்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் வடக்குப் படை அணியின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பிரிவுத் தலைவர் இப்ராஹிம் அல் சாஹர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.