தமிழகத்தில் மழை மற்றும் பருவக்கால மாற்றத்தால், அக்டோபர் மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்கள் தற்போது, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்புகளால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல், சுவாச பிரச்னை மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் சுவாச பிரச்னையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகளே டெங்குகாய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகம் முழுதும் டெங்கு காய்ச்சலில், இம்மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் டெங்கு காய்ச்சலில் அக்டோபர் மாதத்தில், 100-க்கும் மேற்பட்டோரும், சிக்குன் குனியாவால் 25-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது, தமிழகத்தில் டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாதிப்பு வந்த பின், உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதில், மிகக் கவனமாக பணியாற்றி வருகிறோம். ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், குணமாகும் வரை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
நகரங்களில் வீடு வீடாகவும், கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு வருவோரின் விபரங்களையும் சேகரித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல், சளி இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோர், தன்னிச்சையாக எவ்வகை மருந்தையும் உட்கொள்ளாமல், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால், தீவிர பாதிப்பையும், உயிரிழப்பையும் தடுக்கலாம் என்று கூறினார்.