ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், காஸா நகருக்குள் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா நகர சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 5,000-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 15,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில், கடந்த இரு தினங்களாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில், 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா நகர சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் காஸா நகர மக்களின் பலி எண்ணிக்கை 5,750 ஆக உயர்ந்திருக்கிறது.
மேலும், 17,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஆகவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,000-த்தை தாண்டி இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காஸாவிலுள்ள 24 மருத்துவமனைகளில் 8 மருத்துவமனைகள் முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக மருத்துவமனைகளின் பணிப்பாளர் நாயகம் முஹமது சக்கூத் தெரிவித்திருக்கிறார். காஸாவின் தெற்குப் பகுதி கான் யூனிஸில், அல் நாசர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள நாசரேத் பகுதிதான் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
போர் தொடங்கியது முதல் இதே இடத்தில் நடைபெறும் 3-வது தாக்குதல் இதுவாகும். அதேபோல, காஸாவின் மக்கள் அதிகம் கூடும் பரபரப்பான சந்தையும் தகர்க்கப்பட்டிருக்கிறது. தாக்குதலில் காயமடைந்தோருக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளால் முடியவில்லை.
மேலும், இறந்தவர்களின் உடல்களை வைக்கவும் போதிய இடமில்லை. இதனால், மருத்துவமனைக்குள்ளேயே தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து உடல்களை வைத்திருக்கிறார்கள். இதுதவிர, இப்போரில் பயன்படுத்தப்படும் குண்டுகளின் வீரியத்தால் தோல்கள் மெழுகுபோல உரிந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, காஸாவின் தெற்குப் பகுதி மீது அசுரத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், வடக்கு பகுதியில் இன்னும் அதிக பலத்தோடு தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. எனவே, வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பு காரணத்திற்காக தெற்கு நோக்கி இடம்பெயருமாறு இஸ்ரேல் மீண்டும் அறிவித்திருக்கிறது.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் காஸாவின் பெரும் பகுதி தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அங்கு வசித்த 2.3 மில்லியன் மக்களில் ஒரு மில்லியனுக்கும் அதிமானவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அதேசமயம், காஸா மட்டுமல்லாது இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகளிலும் இஸ்ரேல் இராணுவத்தின் சோதனையும், கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, எரி பொருள் தீர்ந்து விட்டதால் காஸாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆகவே, காஸாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. அதேபோல், காஸாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.