முருகனின் ஆறுபடை வீடுகளில், 2-ம் படை வீடாகப் போற்றப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
இந்த திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. தென்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள், திருச்செந்தூர் சென்று வழிபடுவதால், பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதியபடியே இருக்கும்.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர்
பொன்.இராதாகிருஷ்ணன் வருகை தந்தார். திருக்கோவில் வாசல் முன்பு நின்றிருந்த பக்தர்கள் கோவிலில் வழங்கப்பட்ட திருநீற்றில் கலப்படம் உள்ளதாகவும், நெற்றியில் விபூதி இட்டு விட்டு வாயில் போட்டால் நாக்கு புண்ணாகி விட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோவிலினுள் சென்று சுவாமி வழிபாடு மேற்கொண்ட பிறகு, இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனக் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சுகிர்தாவிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, உடனே விசாரிப்பதாகக் கூறிய கோவில் கண்காணிப்பாளர், விபூதியைக் கொடுத்தவரை வரவழைத்து, அந்த விபூதியை பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே உடனே பறிமுதல் செய்து அதனைப் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.