இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நீடித்துவரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.
இஸ்ரேலுக்கும் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே 19-வது நாளாக போர் நீடித்து வருகிறது. இப்போரில் 1,400 இஸ்ரேலியர்களும், 6,000 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 20,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
அதேசமயம், போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆகவே, இழப்புகள் கூடுதலாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், இப்போரால் பாலஸ்தீனம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ரவீந்திரன், “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்பும் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும். இந்தப் போர் சூழலால் அதிகரித்திருக்கும் பதற்றம் மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.
இது மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்தின் பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சவாலான காலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் பொருட்களை இந்தியா அனுப்பி இருக்கிறது.
காஸாவில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தோம். இதற்கு இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆபத்தானது. ஆகவே, நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.