பாரா ஆசியா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற புஷ்பேந்திர சிங்கை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை குவிக்க தொடங்கிவிட்டது.
இன்று ஆண்களுக்கான எப் 64 ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக சுமித் அன்டில் மற்றும் புஷ்பேந்திர சிங் பங்குபெற்றனர்.
இதில் சுமித் அன்டில் தங்கம் வென்றிருந்த நிலையில் இவரைத் தொடர்ந்து புஷ்பேந்திர சிங் 62.06 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
பதக்கம் வென்ற வீரருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எப்64 பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற புஷ்பேந்திர சிங்க்கு வாழ்த்துக்கள். அவரது செயல்திறன், கவனம் மற்றும் வெற்றிக்கான உழைப்பு ஆகியவை நம் தேசத்திற்கு மகத்தான மரியாதையை கொண்டு சேர்த்துள்ளது ” என்று பாராட்டியுள்ளார்.