பாஸ்பேட், பொட்டாசியம் உள்ளிட்ட உரங்களுக்கு ரூ. 22,303 கோடி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உரங்கள் மற்றும் இடுபொருட்கள் அதாவது யூரியா, டிஏபி, கந்தகம் ஆகியவற்றின் சர்வதேச விலைகளின் சமீபத்திய போக்குகளைக் கருத்தில் கொண்டு, உரங்களுக்கு மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். அப்போது, பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு ரூ. 22,303 கோடி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தார்.
நைட்ரஜன் ஒரு கிலோவுக்கு ₹47.2 மானியமாகவும், பாஸ்பரஸ் கிலோவுக்கு ₹20.82 பொட்டாஷ் ஒரு கிலோவுக்கு ₹2.38 மானியமாக வழங்கப்படும் என்றும், மேலும் கந்தகம் ஒரு கிலோவுக்கு ₹1.89 வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
சர்வதேச அளவில் உரங்களின் விலை உயரும் போது, அது நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும், டிஏபிக்கான மானியம் டன்னுக்கு ₹4500 தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.. டிஏபி பழைய விலையின்படி ஒரு மூட்டை ₹1350க்கு கிடைக்கும் என்றும், அனுராக் தாக்கூர் கூறினார்.