பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றி அமைத்திருக்கிறார். ஆகவே, கோவா மக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
கோவா மாநிலத்தில் முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால் கோவா மக்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். நாளை தொடங்கும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள், நவம்பர் 9-ம் தேதிவரை நடைபெறுகிறது. இப்போட்டியை பாரதப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை மாலை கோவா புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த சூழலில், கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், “உள்கட்டமைப்பு முதலீடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி விவாதித்தோம். டிஜிட்டல் முதலீடுகள் மற்றும் திறமையான இளைஞர்களை உருவாக்குவது குறித்து ஆலோசித்தோம். கோவாவில் இருந்து உருவாக்கப்படும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார். ஆகவே, வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்திய மக்கள் சிறப்பான முடிவை எடுப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை மாற்றியமைத்து, தொடர்ந்து வளர்ந்த நாடாக மாற்றி அமைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவா மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள்.
நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பலவீனமான பொருளாதாரங்களில் இருந்து உலகின் முதல் 5 பொருளாதார நாடாக இந்தியாவை கொண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டுகளின் உச்சகட்டமாக இந்த தேர்தல் இருக்கும்” என்றார்.