ராஜஸ்தானின் மாநிலத்தில் நிலத்தகராறு தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், பரத்பூரில் பட்டப்பகலில் ஒருவர் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது கெலாட் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் குற்றவியல் மற்றும் அராஜக மனநிலையின் விளைவு என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் எந்த அச்சமும் இன்றி வீடியோவை வெளியிட்டுள்ளதாக ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில டிஜிபியால் தன் பணியை சரியாக செய்ய முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை பிரியங்கா காந்தி கண்டிக்கவில்லை என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி போய்விடும் என்ற நிலையில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு வருவதாகவும், முதலில் அவர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்திற்கு செல்லும் முன் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா வலியுறுத்தியுள்ளார்.