அமெரிக்காவில் 2 இந்தியர்கள் அந்நாட்டின் மிக உயரிய விருதான தேசியப் பதக்கத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அசோக் கேட்கில். தற்போது 63 வயதாகும் இவர், 1973-ம் ஆண்டு கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பவுதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். இதன் பிறகு, இவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பவுதிகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, 1993-ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட காலரா தொற்றுநோய் பாதிப்பைக் கண்ட கேட்கில், புற ஊதாக் கதிர் மூலமாக குடிநீரை சுத்திகரிப்பு செய்யும் சாதனத்தை கண்டுபிடித்தார். மேலும், வளர்ந்து வரும் நாடுகளில் தூய்மையான குடிநீர் கிடைப்பதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல, மற்றொரு ஆராய்ச்சியாளரான டாக்டர் சுப்ரா சுரேஷ், அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 66 வயதான இவர், பொறியியல் படிப்பிற்கான பிரௌன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவருக்கும் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதான தேசியப் பதக்கம் கிடைத்திருக்கிறது. மனிதகுலத்திற்கு இன்றியமையாத அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் இருவரும் காட்டிய அர்ப்பணிப்பிற்காக இப்பதக்கங்கள் வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. மேலும், இப்பதக்கங்களை இருவருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தார்.