ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ளது அருள்மிகு முருகன் திருக்கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது.
சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இந்த மலைக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தபோது முருகன் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து, சிவாலய சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கி அருள் புரிந்துள்ளார்.
ஸ்ரீஅருணகிரிநாதரால் 5 பாடல்கள் பாடப்பட்ட ஸ்தலம். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட ஸ்தலம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தென்புறம் அமைந்துள்ளது.
மூலவருக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை. மூலவர் விமானத்தின் மீது காக்கைகள் பறப்பதில்லை. சென்னிமலையைச் சுற்றி 24 புண்ணிய தீர்த்தங்கள் அமைந்துள்ளது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள 5 நிலை இராஜ கோபுரத்தின் விதானத்தில் ஒரே கல்லினால் ஆன சங்கிலி வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி பல சிறப்புகள் உள்ளன.
மேலும், மூலவர் அபிஷேகத்திற்கு எருது மூலம் படிவழியே திருமஞ்சனம் கொண்டு செல்லும் பழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் ஸ்தல விருட்சமாக புளியமரம் உள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது ஆதிசேஷனின் தலை விழுந்த இடமாகும்.
குறிப்பாக, இடும்பனுக்கு பொதிகைமலை செல்ல வழிகாட்டிய ஸ்தலமாகும்.
தைப்பூச திருவிழா இங்கு முக்கியத் திருவிழாவாகும்.
திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு சுவாமி முன்பு பூ போட்டுக் கேட்ட பின்னரே செய்வதை கொங்கு மக்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.