நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை. இங்கு நடைபெற உள்ள தீபத்திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றைச் செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின்போது 2,668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதில் சிவ பெருமானே ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 17 -ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23 -ம் தேதி தேரோட்டமும், 26 -ம் தேதி அதிகாலை 4 மணிக்குக் கோவிலில் பரணி தீபமும் ஏற்றப்படுகிறது. அன்றையதினம் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கிரிவலப் பாதை புனரமைத்தல், குடிநீர், தூய்மைப் பணி, சிசிடிவி கேமரா அமைத்தல், அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்துதல், மலை மீது ஏறும் பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவது, அவசர மருத்துவ உதவி மையம் அமைப்பது, ஆம்புலன்ஸ் வாகன வசதி, சிறப்பு பேருந்து இயக்குதல், கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை செய்து தரவேண்டும் என்று பெரும்பாலான பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும், இந்து சயம அறநிலையத்துறையும் பக்தர்களின் கோரிக்கையைக் காதில் வாங்குமா? அல்லது வழக்கம் போல் காற்றில் பறக்கவிடுமா? என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.