ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறவிருந்த நிலையில், முன்கூட்டியே வினாத்தாள் கசிந்தது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 37 மாணவர்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, இச்சம்பவத்தில் சட்டவிரோதமாக ஏராளமான பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலைக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் மஹுவா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹாட்லா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவிந்த் சிங்குக்குச் சொந்தமான சிகார் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள வளாகங்கள், மஹுவா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லாவுக்குச் சொந்தமான இடங்களிலும் இச்சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவ்வழக்கில் முன்னாள் ஆர்.பி.எஸ்.சி. உறுப்பினர் பாபுலால் கட்டாரா, அனில் குமார் மீனா ஆகியோர் அமலாக்கத்துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் கோதானியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, 12 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனைகள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.