ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ராஜ் பவன் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : “நேற்று (25.10.2023) மதியம் சுமார் 2.45 மணி அளவில். சென்னை ராஜ்பவன் மெயின் கேட் எண்.1 வழியாக பெட்ரோல் குண்டுகளுடன் சில மர்மநபர்கள் ஊடுருவ முயன்றனர். இருப்பினும், விழிப்புடன் இருந்த காவலர்கள், அவர்கள் ராஜ்பவனுக்குள் நுழைவதைத் தடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ராஜ்பவனின் பிரதான நுழைவாயில் கேட்-1ல் முதல் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பிறகு, அது பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறித. மர்ம நபர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் விரைந்தனர்.
அப்போது ராஜ்பவனின் பாதுகாப்புப் பணியாளர்களை தாக்கியவரை அடக்க முயன்றபோதும், மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, இதன் விளைவாக ராஜ்பவனின் பிரதான நுழைவாயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. எனினும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
ஐபிசி பிரிவு 124 மற்றும் பிற தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆளுநரின் துணைச் செயலர் மற்றும் கட்டுப்பாட்டாளரால், பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் காவல்துறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரை மீறி, அவரது அரசியலமைப்புச் சட்டப் பணிகளைச் செய்வதிலிருந்து அவரைத் தடுக்கும் நோக்கத்தில் அச்சுறுத்தல் முயற்சிகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீசில் புகார் அளித்தும் பலனில்லை.
ஏப்ரல் 18, 2022 அன்று கவர்னர் தருமபுரம் ஆதீனத்தில் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தபோது, தடியடி மற்றும் கற்கள் மூலம் தாக்குல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக ராஜ்பவன் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது, ஆனால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை மற்றும் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் மேற்கொண்டு உள்ள நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கையை கவர்னர் கேட்டுப்பெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.