ஆந்திராவில் வாஷிங் மெஷினுக்குள் வைத்து கடத்தப்பட்ட 1.30 கோடி ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஹவாலா பணமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் பணம் கடத்திச் செல்லப்படுவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அது ஒரு எலெக்ட்ரானிக் கடைக்குச் சொந்தமான லோடு ஆட்டோ. அந்த ஆட்டோவில் சீல் உடைக்கப்படாத 6 வாஷிங் மெஷின்கள் மட்டுமே இருந்தது. எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.
அதற்கு, அந்த ஆட்டோ ஓட்டுநர் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வதாகக் கூறியிருக்கிறார். இதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வார்களா என்கிற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, ஆட்டோவில் இருந்த 6 வாஷிங் மெஷின்களையும் கீழே இறக்கிய காவல்துறையின், அவற்றை பிரித்து சோதனை செய்தனர். அப்போது, வாஷிங் மெஷினுக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 1.30 கோடி ரூபாய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், ஆட்டோவையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு, தசரா பண்டிகையை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வகையில் கிடைத்த பணம் என்றும், வங்கியில் செலுத்துவதற்காக விஜயவாடா கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். எனினும், பணத்திற்குண்டான போதிய ஆதாரம் இல்லாததால் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இது ஹவாலா பணமா அல்லது தெலங்கானா மாநிலத்தில் அடுத்தமாதம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் செலவுக்காகவோ அல்லது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காகவோ கொண்டு செல்லப்பட்ட பணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.