இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் போர் நடந்து வரும் நிலையில், கோவை உக்கடம் மேம்பாலத்தில் பாலஸ்தீனக் கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.
இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. 6,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,000-த்தைத் தாண்டி இருக்கிறது. 20-வது நாளாக இன்றும் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருக்கிறார்.
இப்போரில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட கிறிஸ்தவ நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேசமயம், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதனிடையே, இப்போரை நிறுத்த கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 24-ம் தேதி கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் அனைத்து ஜமாத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், போராட்டத்தின்போது போராட்டம் நடந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது சிலர் பாலஸ்தீனக் கொடியை கட்டி இருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, உக்கடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகியோர் பாலஸ்தீன கொடியை கட்டியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, உக்கடம் காவல்துறையினர் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.