உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியில் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இலங்கை புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்னிலும், டேவிட் மலான் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஜோ ரூட் 3, கேப்டன் ஜோஸ் பட்லர் 8, லியாம் லிவிங்ஸ்டன் 1, மொயீன் அலி 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் குசால் பெரேரா 4 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பதும் நிசாங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். நிசாங்கா 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலமாக தொடர்ந்து 4 முறையாக உலகக் கோப்பையில் அரைசதம் விளாசியுள்ளார். மேலும், இந்த ஆண்டில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் நிசாங்கா 11 முறை அரைசதம் அடித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து சதீரா சமரவிக்ரமாவும் தொடர்ந்து அரைசதம் அடித்தார். அவர் 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக இலங்கை 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக இலங்கை புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 9ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.