நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு செல்லும் வகையில் சங்கல்ப யாத்திரை நவம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது.
இந்த யாத்திரை, பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு துவங்க உள்ளது. இதற்காக 2,700 வேன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ரதம் வடிவில் உள்ள வேனில், தகவல், கல்வி, தொடர்பு ஆகிய அம்சங்கள் இருக்கும். மற்றும் வைஃபை, திரைகள், ஒலிபெருக்கி, நேரலை வசதி உள்ளிட்டவைகளும் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், திரையில் தோன்றும் பிரதமர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க உள்ளார்.
முதலில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், அடுத்து, 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 3,700 நகராட்சிகள் உள்ளிட்ட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காணொளி, துண்டுப் பிரசுரம், சிறிய புத்தகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படும்.
குறிப்பாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுக்கும் திட்டம், வீடு தோறும் குடிநீர் இணைப்பு திட்டம் போன்ற 20 மக்கள் நலத் திட்டங்கள் இதில் அடங்கும்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்பு தொடங்கும் என்றார்.