இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக இந்தியன் முஜாகிதீன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் ஒருவரான சையத் மக்பூலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் நான்டெட்டில் வசிக்கும் மக்பூல், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்களுடன் தீவிரமாக தொடர்பில் இருத்ததும், குற்றம் மற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
என்ஐஏ விசாரணையில், பாகிஸ்தானில் உள்ள ரியாஸ் பட்கல் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள இம்ரான் கான் மற்றும் ஒபைத்-உர்-ரஹ்மான் உள்ளிட்ட இந்தியன் முஜாகிதீன் முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. ஹைதராபாத்தை முதன்மை இலக்காகக் கொண்டு, இந்தியாவிற்குள் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. .
டேனிஷ் அன்சாரி, அஃப்தாப் ஆலம், இம்ரான் கான் மற்றும் ஒபைத்-உர்-ரஹ்மான் ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி அவர்களுக்ககு 10 ஆண்டுகள் என்ஐஏ நீதிமன்றம் சிறைதண்டனை விதித்தது. தற்போது சையத் மக்பூலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.