எனது ஆட்டமும் சிறப்பாக இல்லை, வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை – பட்லர்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்த்தார்.
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் நிசாங்கா 77 ரன்களையும், சமரவிக்ரமா 65 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது.
இந்தத் தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது, ஒரு கேப்டனாக ஏராளமான உணர்வுகள் ஏற்படுகிறது. முதலில் எனது ஆட்டமும் சிறப்பாக இல்லை. வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்து அணியில் அனுபவ வீரர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஒருநாள் இரவில் எப்படி ஒரு அணியால் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை நினைக்கும் போது தான் விரக்தியாக உள்ளது ” என்று கூறினார்.
மேலும் அவர், ” இந்த உலகக்கோப்பையில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதற்கென காரணங்களும் இல்லை. யாரையும் கை நீட்டி குற்றம் சொல்ல முடியாது. இந்த அணியில் பிளேயிங் லெவனும் பிரச்சனையில்லை. இன்றைய ஆட்டத்தில் ஜோ ரூட் ரன் அவுட் உள்ளிட்ட விக்கெட்டுகளை கொடுத்தோம். நாங்கள் இதுபோன்ற சாதாரண தவறுகளை செய்யக் கூடிய அணியல்ல.
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அடிப்படையை கூட எங்களால் செய்ய முடியவில்லை. அதேபோல் தற்பெருமையும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. எங்களுக்கான தரத்தை நாங்கள் தவறவிட்டுள்ளோம். அடுத்தடுத்து ஆடவுள்ள போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.
பட்லர் பேசும் போது அவரது குரல் எந்தவித உற்சாகமும் இன்றி தழுதழுத்த நிலையில் பேசியது குறிப்பிடத்தக்கது.