குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மாற்றி, சட்ட விதிகள் மற்றும் தண்டனைகளை மாற்றும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றக் குழு நிறுத்தி வைத்திருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆா்.பி.சி.), சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான 3 மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்தாா்.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) மசோதா 2023’, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆா்.பி.சி.) 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) மசோதா 2023’ மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பி.எஸ்.) மசோதா 2023’ ஆகிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அப்போது பேசிய அமித்ஷா, மேற்கண்ட 3 மசோதாக்களும் இந்திய குற்றவியல் நீதி அமைப்புமுறையை பெரிய அளவில் மாற்றும். விரைவாக நீதி வழங்கவும், மக்களின் சமகால தேவைகள் மற்றும் விருப்பங்களை பூா்த்தி செய்யும் சட்ட அமைப்புமுறையை உருவாக்கவும் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டாா்.
இந்த 3 மசோதாக்களையும் உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு மக்களவை பரிந்துரைத்தது. இந்த மசோதா இன்று நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் மேற்கண்ட மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் நவம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, மேற்கண்ட மசோதாக்களுக்கு நிலைக்குழு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.