தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே டாஸ்மாக் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில், அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடையைத் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது எனக் கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, டாஸ்மாக் கடையைத் திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள். இதனால் கிராமத்துப் பெண்கள் மற்றும் மாணவிகள் சென்று வர அச்சுறுத்தல் ஏற்படும்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தினமும் கூலி வேலைக்குச் செல்லும் ஆண்கள் சம்பளப் பணத்தைக் குடித்துத் தீர்த்து விடுவார்கள். கிராமத்தில் உள்ள வாலிபர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மது பழக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையைத் திறந்தால் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை அடுத்து காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.