ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம், தொழில்துறை வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறார். இவருக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில் “நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம். இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து மும்பையின் காம்தேவி விமான நிலையத்தில் பிரிவு 387, 562 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே கடந்த ஆண்டும் இதேபோல பீகார் மாநிலத்தில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.