இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு, இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 14-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, 27 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
விசைப்படகுகளைப் பறிமுதல் செய்த அவர்கள், மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்குப்பதிவு செய்து, மன்னார் மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு, சிறையில் அடைத்தனர்.
இதை அடுத்து, இலங்கை கடற்படையினர் செயலைக் கண்டித்தும், மீனவர்கள் படகுகளை மீட்டு கொண்டு வர வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர்.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தினசரி 1 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறிய இரக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். பெரிய விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 12 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்தது. இதனால் அவர்கள் நவம்பர் 8-ஆம் தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையிலும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்ததாலும், வேலைநிறுத்த போராட்டத்தைத் திரும்பப் பெற்று இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர்கள் அச்சமின்றி கடலில் மீன்பிடித்து வரும் சூழலை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.