இஸ்ரேல்-காஸா போருக்கு மத்தியில், கிழக்கு சிரியாவில் ஈரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஆயுத சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த மோதல் தொடங்கியதில் இருந்தே, ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீதும், அதன் ஆதரவு படைகள் மீதும் குறைந்தது 12 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, சிரியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் மீதும் சுமார் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 17-ம் தேதியும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 21 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கு தொடர்புடைய 2 இடங்கள் மீது அமெரிக்கப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவும், தற்காப்புக்காகவும் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆஸ்டின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் நடத்தப்படும் இத்தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தாக்குதல் தொடர்ந்தால், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மத்திய கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு தனது போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா, தற்போது மேலும் 900 அமெரிக்க இராணுவ வீரர்களையும் அனுப்பி இருக்கிறது. இதனால், அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.