திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், உண்மையை யாராலும் மறைக்க முடியாது. எம்.பி. எப்படி விற்கப்பட்டார் என்பதை நாடு அறிய விரும்புகிறது என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற ஒழுங்குக் கமிட்டி விசாரித்து வருகிறது.
இதனிடையே, வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே ஆகியோர் ஒழுங்கு கமிட்டி முன்பு ஆஜராகினர். அப்போது, கேள்விக்கு பணம் பெற்ற விவகாரத்தில் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிகள் நடப்பதாக மஹுவா மீது பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறார்.
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக பதியப்பட்டுள்ள வழக்கில் வரும் அக்டோபர் 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நாடாளுமன்ற ஒழுங்குக் கமிட்டி சம்மன் அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “நாடாளுமன்ற ஒழுங்கு கமிட்டி யாரையாவது அழைத்திருந்தால், அவர்கள் சென்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். அவர் தனது தவறுகளை ஏற்காவிட்டாலும், உண்மையை மறைக்க முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி விற்கப்பட்டார் என்பதை நாடு அறிய விரும்புகிறது. இது கவலைக்குரிய விஷயம். இது தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழல் விவகாரம். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்” என்றார்.